Tuesday, January 12, 2016

தீ தீ தீ

தீங்கனி - தீக்கனி
தீஞ்சொல்  - தீச்சொல்
தீந்தேன் - தீத்தேன்
தீம்புகை - தீப்புகை

ங, ஞ, ந, ம போன்ற மெல்லின ஒற்றுக்களோடு புணர்கையில் "தீ" இனிமை, மகிழ்ச்சி போன்ற மென்மையான பொருள் தருகிறது.

க, ச, த, ப போன்ற வல்லின ஒற்றுக்களோடு புணர்கையில் "தீ" கடுமை, தீமை, கெட்ட போன்ற வன்மையான பொருள் தருகிறது.

ரெண்டாயிரத்துப் பதினாறு

ரெண்டாயிரத்துப் பதினாறும் பெற்று
கொண்டாட்ட பெருவாழ்வு வாழ
முன்னோட்ட முயற்சிகள் செய்யும்
என்னாட்டம் நண்பர்களுக்கும்
மற்றும் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Monday, February 2, 2015

வறுமை ஒழிந்தது!!!

வாழ்க்கையை
வளமாக்குவது
எப்படி? - என்ற
வித்தையை விளக்கும்,
விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கும்,
விலையுயர்ந்த புத்தகங்களால்
வளமானவர்களின்
கண்களில் பட்டுவிடாமல்
வறுமை ஒளிந்தது!!!
          - சிவா 

Sunday, February 1, 2015

கொசுத் தொல்லை

உறக்கத்தைக் கலைக்கும்
கொசுக்கள்  போல
இயற்கைய அழிக்கும்
மனிதர்கள்!
பூகம்பங்கள்  சுனமிகளைக்
கையில் எடுத்து
இயற்கை இந்த
மனிதக் கொசுக்களை
"ஆள் " அவுட்  செய்யுமே தவிர
அது அவுட் ஆகாது!
               - சிவா 

Saturday, January 31, 2015

இலக்கு

இலக்கு நிர்ணயித்துப்
பயணிப்பவன்,
இலக்கை அடைந்ததும்
இளைப்பாற ஒதுங்குகிறான்!
பயணிப்பதே இலக்காய்
நினைப்பவன் - பலரது
இலக்குகளைக் கடந்தும்
இயல்பாக  ஓடுகிறான்!
                            - சிவா 

Friday, January 30, 2015

தொழில்நுட்பம்

உழைப்பாளிகளை எல்லாம்
ஓரம் கட்டி,
முதலாளிகளை மட்டும்
உயர வைக்கும்,
எந்தவொரு தொழில்நுட்பமும்
ஏழை--------------------------பணக்காரன்
இடைவெளியை
நீட்டிக்கொண்டுதான் இருக்கும்!
                                                   - சிவா 

Friday, January 23, 2015

வள்ளுவனின் வருணாசாரம் !

ஒழுக்கமுடைமை அதிகாரத்தில்
வள்ளுவன் வருணசாரம்
விளம்பியிருப்பது கண்டு
வியப்படைந்தேன்!
                                - சிவா 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். - குறள்  134



மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.